அபிஜீத் தீப்கே எங்கே? நேஹா போரா எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர்களின் கைதுக்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக, நேற்று தேசியக் கொடி பேரணி நடத்தப்படும் என அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார். ஆனால், பேரணிக்கு முன்பாகவே அபிஜீத் தீப்கே, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அபிஜீத் தீப்கே, நேஹா போரா கைது செய்யப்பட்டது குறித்து மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி, மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
டெல்லி காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தியதற்காக அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் இளைஞர்கள் சுதந்திர இந்தியாவில் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் நிலைநாட்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது அறிவிக்கப்படாத அவசரநிலையைத் தவிர வேறு எதுவுமில்லை. மாற்றுக்கருத்துகளைக் கண்டு அஞ்சும் ஒரு அரசு ஒட்டுமொத்த தலைமுறையையும் மிரட்டி அமைதியாக்க முயற்சி செய்கிறது. தங்களால் கட்டுப்படுத்த முடியாத குரல்களை பொறுத்துக்கொள்ள முடியாத பாசிச அரசின் செயல்பாடு இது எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, அபிஜித் தீப்கே எங்கே? நேகா போரா எங்கே? அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதைக்கூடத் தெரிவிக்காமல் கைது செய்து வைத்திருப்பது அப்பட்டமான சட்டவிரோதச் செயலும், மனிதநேயத்துக்கு எதிரானதும் ஆகும்.
ஒன்றிய அரசு அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும். போராட்டத்தை ஒடுக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் வலுப்படுத்தவே செய்யும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்வதைத் தவிர ஒன்றிய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
